ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முற்படுதல் ஜனநாயக விரோதமாகும்! மயந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தனது பதவிக் காலத்தை நீடிக்க முற்பட்டால் அது ஜனநாயக ரீதியில் தவறான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மயந்த திஸாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தும் வரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரும் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என ஐக்கிய மக்கள் சக்தி நம்புகின்றது. மேலும், ஜனநாயகத்தை பாதுகாத்து, தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையூறு இல்லாமல் தேர்தலை நடத்த தேவையான சூழலை அரசாங்கம் தயார் செய்து நாட்டு மக்களுக்கு ஜனநாயக ரீதியாக உரிமைகளை வழங்க முன்வர வேண்டும்.

அடுத்த அரச தலைவரை தெரிவு செய்வதற்கான எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச நிச்சயமாக போட்டியிடுவார். அத்துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுர திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அவ்வாறே பொதுஜன பெரமுனவும் இதுவரை தமது ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 5 வருட காலத்திற்கே மக்களால் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த 5 வருடங்கள் தொடர்பாக அரசியலமைப்பில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அந்த ஓட்டையைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தை நீடிக்க முற்பட்டால், அது ஜனநாயக ரீதியாக தவறான விடயமாகும். அத்துடன் தற்போதைய நாடாளுமன்றமும் நாட்டு மக்களின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படல் வேண்டும்”  – என்றார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply