கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவரின் மரணத்தை ஏற்படுத்திய அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், கிளப் வசந்த என அழைக்கப்படும் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற பிரபல வர்த்தகரும், 38 வயதான ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்.
மேலும், பிரபல பாடகர் கே.சுஜீவா உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த நால்வரில் மூன்று பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஏனைய பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகநபர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் மற்றும் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வெள்ளை நிற காரில் வந்ததாகவும், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த இரண்டு T56 ரக தாக்குதல் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
