அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகள் இன்று (17) முதல் குறைக்கப்பட உள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி உரத்தின் விலை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
கறுவா, தேயிலை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அரச உர நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் APM உரம் 7200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன் 8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் YPM உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 9750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(யூரியா) உரம் 7950 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன் 8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(SA) உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 11000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் TDM உரம் 9200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.