தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் இதை உலகிற்குக் காட்டுவதுதான் எங்கள் விருப்பம்! சித்தார்த்தன் தெரிவிப்பு!

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம். அதுதான் பொது வேட்பாளர் குறித்த விடயம்!” என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் போராட்டம் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் இன்றும் மாறாது அப்படியே இருக்கின்றது.

மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதைப் பார்க்க கூடியதாகவுள்ளது, என்றார்.

சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அது பொருளாதாரம், அரசியல், கல்வி, மக்கண் எண்ணிக்கை என நீண்டு செல்வதாகவும், அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் மக்கள் சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த நிலை தொடருமானால் அது தமிழ் மக்களைப் பின்னடைவுக்கும் படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்தாலும், ஓர் இனமாகப் பார்க்கின்ற பொழுது இது ஒரு பின்னடைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது ஜனாதிபதிகூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் எனக் கூறுவதாகவும், அவர்களிடம் இருக்கக் கூடிய அந்த பொருளாதாரப் பலத்தை இங்கு கொண்டு வரலாம் எனச் சிந்திக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வைக் கொடுக்க தயாரில்லை எனவும் நடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply