கூட்டங்களின் போது திரளும் மக்களின் எண்ணிக்கையை கொண்டு தேர்தல் வெற்றிகளை கணிக்க முடியாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் வலய பிரதிநிதிகள் விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு குளியாப்பிட்டியவிலிருந்து தினமும் பஸ்ஸொன்று செல்வதைப் பார்த்துள்ளேன். அதனால், கூட்டத்தைப் பார்த்து வெற்றியை கூற முடியாது. சமூக ஊடகங்களோ, அரசியல்வாதிகளின் பேச்சுக்களோ மக்கள் கருத்தாக அமையாது. ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களூடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போலியான பிரச்சாரங்களே அவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய வேட்பாளர்களில், தற்போதைய ஜனாதிபதி மட்டுமே உங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார். அவர் தனது அரசியல் அனுபவத்துடனும், தனது வளர்ச்சித் திட்டங்களிலிருந்து கற்ற அறிவுடனும், இளைஞர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளார். அவரது பணியாற்றும் திறன் துடிப்புடன் இளமையாகவே உள்ளது. தலைமுறை மாற்றம் – வேறுபாடு எவ்வாறு நடை பெறுகின்றது என்பதை அவர் நன்றாகவே கண்டுள்ளார். அவர் தனது உண்மையான தலைமைத்துவத்தை ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டுக்கு காட்டியுள்ளார். நாட்டுக்கு தேவையான முடிவுகளை சரியான நேரத்தில், சரியான முறையில் அவர் எடுத்துள்ளார்.
நமது நாட்டில் நிலவுகின்ற ஊழலைப் பற்றி,கொமிஷன் வாங்குதல் பற்றி பலரும் பேசுகின்றார்கள், ஆனால் ஜனாதிபதி தான் இலங்கையில் ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவெற்றியுள்ளார். எதிர்காலத்தில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய உலகம் முற்றிலும் வேறுபட்டது. இந்த அறிவு என்பது அடிக்கடி புதுப்பிக்கப்படுவதுண்டு. தற்போதுள்ள பாரம்பரிய தொழில்களில் அறுபது சதவீதமானவை மாற்றம் கண்டு புதிய உலகத்திற்கேற்ப புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு புதிய உலகத்தை நீங்கள் கனவு கண்டால், அதை நிறைவேற்றும் திறன் இந்த ஜான்பாதிபதியிடமே உள்ளது என்பதை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும் – என்றார்.
