மக்களை ஏமாற்ற முயல்கிறது இலங்கை அரசு – பவ்ரல் சுட்டிக்காட்டு!

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றது, என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அமைச்சரவ, எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து தான் முரண்படவில்லை, எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் – இவை பாரதூரமானவை, என அவர் கூறியுள்ளார்.

இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கும், வரிகளைக் குறைப்பதற்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச்செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தபால் மூல வாக்களிப்பிற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பு, 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களைக் கவருவதற்கான முயற்சி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர்தான், ஒரு சதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

சம்பள உயர்வை வழங்கும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் ரூபா மேலதிகமாகத் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிவிப்புகள் மூலம் தற்போதைய அரசாங்கம், அரச ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது எனவும் ரோகண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply