ரணிலுக்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணி நாளை அங்குராா்ப்பணம்

எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு – பரப்புரைகளை தீவிரப்படுத்தவும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், இதன் அங்குரார்ப்பண நிகழ்வை நாளை வியாழக்கிழமை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஹேஜ் ஹொட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதுடன், நாளை காலை ரணிலை ஆதரிக்கும் அனைத்து எம்.பிகக்ளும் இந்த நிகழ்வில் பங்குபற்றி உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரணில் விக்ரமசிங்கவின் தரப்பால் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

கூட்டணியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய பதவிகள் குறித்த அறிவிப்புகளும் இதன்போது வெளியிடப்பட உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி உட்பட பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளன.

ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு இந்தக் கூட்டணியின் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply