நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற கடந்த கால சம்பவங்கள் தொடர்பான காணொளி காட்சிகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை பரப்பப்பட்டு வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்த சில வாகனங்கள் பல்வேறு நபர்களால் சோதனையிடப்படுவது போன்ற காணொளிகள் மற்றும் கடந்த காலங்களில் ஊரடங்குச் சட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் தற்போது மீள்பகிர்வு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இதுபோன்ற காணொளிகள் மறுசுழற்சி செய்வதால் தவறான தகவல்கள் பரவும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்தக் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வது, அண்மைக்கால நிகழ்வுகள் என பொய்யாகக் காட்சிப்படுத்துவது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், நாட்டில் பொது ஒழுங்கையும் சட்டத்தையும் பேணுவதற்கு நேரடியாக இடையூறாக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது போன்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.