தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் இருந்த மூன்று கேள்விகளுக்கு இணையான மூன்று கேள்விகள் மாதிரி பரீட்சை வினாத்தாள் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாளை (18) விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், வினாக்கள் உண்மையில் கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்தால், தாள் குறியிடும் பணியின் போது இந்த கேள்விகள் புறக்கணிக்கப்படும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் மூன்று வினாக்களுக்கு ஒத்த மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இதன்படி புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு கலந்துரையாடலுக்காக இன்று கூடியதுடன் அது தொடர்பான மூன்று கேள்விகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நாளை (18) குறித்த பகுதிக்கு செல்லவுள்ளதாகவும் அவர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.