பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.

158 வருட இலங்கைப் பொலிஸ் துறை வரலாற்றில் கொன்ஸ்டபில் ஆக சேவையில் இணைந்துகொண்டவர் ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுகொண்டிருக்கும் ஒரே சந்தர்ப்பம் இதுவாகும்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் பட்டம் பெற்ற அவர், இலங்கைச் சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் பொலிஸ் அதிகாரியாக நிலை உயர்வு பெற்றார்.

மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான வர்த்தக நிருவாகப் பட்டத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்குள் முப்பத்தாறு வருட களங்கமற்ற சேவையை ஆற்றியுள்ள வீரசூரியவின் சேவையைப் பாராட்டி 10 பொலிஸ்மா அதிபர்கள் கடிதம் வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் குற்ற மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் பொலிஸ் விநியோகப் பிரிவின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள அவர், கிழக்குத் தீமோர் மற்றும் ஹெயிட்டி ஆகிய நாடுகளில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுக்கொள்ளும் வேளையில், வீரசூரிய வட மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிக்கொண்டிருந்தார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply