இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக இன்று (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம் பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னலுக்கான ஆலோசனையையும் வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.