
உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் விளையாடினார்.
14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று (12) பிற்பகல் 14 ஆவது சுற்று இடம்பெற்றது. ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையில் மிகவும் சவாலான போட்டி நிலவியமையால் போட்டி சமநிலையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்து.
எனினும் 14 ஆவது சுற்றில் குகேஷ் திறம்பட விளையாடி வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்டார்.
இந்தப் போட்டியின் சிறப்பு யாதெனில், இதில் பங்குபெற்ற இருவருமே ஆசியாவை சேர்ந்த வீரர்கள் ஆவர். இறுதிப் போட்டியில் ஆசிய வீரர்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் முதல் செஸ் சாம்பியன்ஷிப் இதுதான்.
தமிழக வீரர் குகேஷ் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.