
ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு குறித்த முழு விபரங்களும் இணைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் அரசியல் ஆதயத்திற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிக்கவில்லை.
மாறாக நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதால், அதை அதிகரிக்க நாங்கள் பாடுபடுகிறோம்.
தற்போதுள்ள சம்பளம் போதுமானதாக இல்லை, என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சேதமடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு பொறுப்பான நிர்வாகமாக, மக்களை கடினப்படுத்தி 2026 வரை காத்திருக்கச் சொல்ல முடியாது. நாங்கள் அத்தகைய அணுகுமுறையை எடுக்கவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அடுத்த ஆண்டுக்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.