2026 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகள் திட்டம் முன்பு போல் வழமைக்கு திரும்பும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று (8) பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகள் திட்டம் முன்பு போல் வழமைக்கு திரும்பும் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 2020 ஆம் ஆண்டு கோவிட் 19 தொற்றுநோய் நிலைமை, 2021 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாடசாலை தவணைக் காலங்கள் அந்தந்த தவணைகளைத் தாண்டிவிட்டிருந்த போதிலும், 2025 ஆம் கல்வியாண்டில், 181 நாட்கள் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு போதுமான கால அவகாசம் அளித்து, 2025 டிசம்பரில் பாடசாலை தவணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் பாடசாலை காலத்தை வழமை போன்று பேண முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அனைத்து பிள்ளைகளுக்கும் 13 ஆண்டுகள் தொடரான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கமாகும் என்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் மனித வள அபிவிருத்தி, கல்வி முறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் மூலம் பாடசாலை முறைமையை புதிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்குள் கொண்டுவர எண்ணுகிறோம். இதன்போது புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்தல், ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றின் மூலம் கல்வித் துறையில் மனித வளத்தை மேம்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.