HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் உள்ளது- நளிந்த ஜெயதிஸ்ஸ!

HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி நிஷாந்த சமரசிங்க எம்.பி, எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறிய அவர், HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் தெரியப்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

வைரஸிற்கான சோதனைகளை மேற்கொள்ளும் இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயியல் பிரிவு தொடர்ந்து வைரஸ் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கி வருகிறது. ஜனாதிபதியும் இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய நோயாளி ஒருவர் பதிவாகியுள்ளார். ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையின் பெறுபேறு எதிர்மறையாக உள்ளது.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், நோயெதிர்ப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மாலவிகே சில காலத்திற்கு முன்பு இலங்கையில் HMPV நோயாளிகள் கண்டறியப்பட்டதாகக் கூறியதை சில ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டியதாகவும், முக்கியமான பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பொறுப்புடன் செயற்படுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply