தைவானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பல நாடுகளிலும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பட்டம் என்றால் சிறிய வகை பட்டமாக இல்லாமல் பல வகையாக உருவங்கள் கொண்ட ராட்சத பட்டங்களையும் பறக்க விடுவர்.
இப்படி தைவானில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில் பட்டத்தின் வாலோடு சேர்ந்து சிறுமியும் வானை நோக்கி இழுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
தைவானின் நானிலியோ பகுதியில் பட்டம் விடும் விழா நடைபெற்றது. இதில் பறந்த ராட்சத பட்டத்தின் வாலில் அங்கு நின்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் சிக்கி அவரும் வானத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார். சில மீட்டர்கள் உயரே சென்றதும் பட்டத்துடன் சிறுமி இருப்பதை கீழே உள்ளவர்கள் பார்த்து துரிதமாக பட்டத்தை தரையை நோக்கி இழுத்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
சிறுமிக்கு மனதளவில் பதட்டமும் பயமும் இருப்பதாகவும், உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படாமல் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விஷயத்தில் நாம் அதிக கவனமாக இருக்கவேண்டுமென்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.