ஒரு இலட்சம் குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதிக்கமைய நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு தற்போது ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வடக்கு, கிழக்கு பிரதேங்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் எனவும் குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir