நூர் இனாயத் கான் அல்லது பக்கீர் என அழைக்கப்படும் இந்த பெண் துணிச்சலுக்கு பெயர்போன வரலாற்று நாயகி .
ஜனவரி 1 ஆம் திகதி 1914 ஆண்டு பிறந்து, செப்டம்பர் 13 ஆம் திகதி 1944 ஆண்டு வீரமரணம் அடைந்தவர் .
இவர் ஒரு இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) இரகசிய உளவாளியாக இருந்தவர்.
பிரான்சை நாட்சி ஜெர்மனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார்.
முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார்.
இவர் கிட்லரின் இரகசியப் படையினரால் 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு ஜெர்மனியில் உள்ள டச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறுவயதிலேயே ரஷியாவில் இருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்தது இனாயத்தின் குடும்பம். தன் படிப்பை முடித்தவுடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதும் வேலை பார்த்து வந்தார் இனாயத். பிரான்சு ஜெர்மனியிடம் வீழ்ந்த பின்னர், இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்று பெண்களுக்கான ராணு வப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார். ரேடியோ மூலம் தகவல்களை அனுப்புவதில் அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டது. அதுதான் பின்னாளில் அவரது உயிருக்கே ஆபத்தாகிப்போனது.
மடிலீன் என்னும் பெயரில் பிரான்சிற்குத் திரும்பினார் இனாயத். ஜெர்மனியின் தாக்குதல் பற்றியும், திட்டங்கள் குறித்தும் இங்கிலாந்திற்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் உளவு வேலையில் பணியாற்றிய இனாயத், வெகுவிரைவிலேயே ஜெர்மனியின் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார்.
துரோகம் தனது வஞ்சகத்தை மறுபடி இவ்வுலகத்திற்குக் காட்டியது. சக ஊழியர் ஒருவராலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்று குவிக்கக் கட்டப்பட கான்சென்ரேஷன் காம்புகளுக்கு கொண்டுவரப்பட்டார் இனாயத்.
பல யூதர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்வதற்குக்காகவே கட்டப்பட்ட அவ்விடத்திலிருந்து ஜெர்மனியின் வலிமையான இராணுவ வீரர்களை ஏமாற்றித் தப்பித்தார். மறுபடியும் துரோகம். மறுபடி சிறை. ஆனால் இம்முறை கடுமையான சித்ரவதைகள் அவருக்குத் தரப்பட்டன.
இங்கிலாந்திற்குத் தவறான செய்திகளை அனுப்பும்படி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். எது நடந்தாலும் அது மட்டும் நடக்கவில்லை. உடல் முழுவதும் காயங்கள். இங்கிலாந்து தன்னை வாழவைத்த நாடு அதனை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.
இரண்டாம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஜெர்மனி வீரர்கள் போரில் கலந்துகொண்டிருந்த வேளையில் இனாயத் சிறையினை விட்டுத் தப்பிசெல்ல முயன்று ராணுவத்தால் பிடிக்கப்பட்டார்.
அடுத்தவினாடி அவரது உடம்பினை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாய்த் துளைத்தன. இன்றும் பிரிட்டன் இனாயத்தின் பெருமையைத் தம் குழந்தைகளுக்கு கண்ணில் நீர் வழிய சொல்லிக் கொடுக்கிறது. 1949 – ஆம் ஆண்டு அந்த வீர மங்கைக்கு பிரிட்டனின் உயரிய விருதான ஜார்ஜ் க்ராஸ் (George Cross) விருது அளிக்கப்பட்டு சிறப்பித்தது இங்கிலாந்து. இன்று அவரின் வீரமரணம் நிகழ்ந்தநாள் அந்த வீரமங்கையை நினைவில் கொள்ளுவோம். – ப்ரியமதா பயஸ்