70 வீத மின்சாரத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் பெற முடிவு

இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின்சாரத் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் மீள்பிறப்பாக்கல் சக்தி வளத்தை நாடுகின்றனர்.

நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 வீதமாகும்.

அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக மின்சக்தி வளத்திற்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மீள்பிறப்பாக்க சக்திவள அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது.

அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

விலைமனுக்கோரல் நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படாவிட்டால், வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, சூரியசக்தி திட்டங்களை குறித்த மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்குவதும், அதன் நன்மையில் குறித்த வீதத்தை விவசாய சமூகங்களுக்கு வழங்குவதும் பொருத்தமானதாகும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பாடசாலைகள், தொழிற்சலைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களின் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதனுஸடாக கிடைக்கும் நன்மையின் ஒரு பகுதியை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும்இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மன்னார், பூநகரி மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் காற்று மின் பிறப்பாக்கிகளை நிர்மாணித்து, தேசிய மின்சக்தி முறைமைக்கு குறிப்பிடத்தக்களவு மீள்பிறப்பாக்கல் சக்தி வளத்தை இணைப்பதும் ஒரு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

காற்று அல்லது சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி அரசாங்கம் அனைத்து ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir