சாவகச்சேரியில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று(18) இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ்  மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேக நபராக தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir