சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் உண்டாகி ஒர் ஆண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அவ்வைரஸின் பாதிப்பு நவீன உலகம் சந்தித்திராத வகையில் அமைந்துள்ளது. இதற்கு எதிரான தடுப்பூசியை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் கொண்டு வர பல்வேறு மருந்து நிறுவனங்களும் மும்முரம் காட்டி வருகின்றன. பைசர், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனகா உள்ளிட்ட தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% மேல் வெற்றிக்கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சீன மருந்து நிறுவனமான சினோவேக் பையோடெக் தயாரித்துள்ள கொரோனாவேக் தடுப்பூசியும் பாதுகாப்பானதாக இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 16 முதல் மே 5 வரை சீனாவில் 700-க்கும் மேற்பட்டோரிடம் இம்மருந்து பரிசோதிக்கப்பட்டது. சோதனை செய்யப்பட்ட அனைத்து அளவுகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது. பொதுவான பக்க விளைவாக ஊசி போடும் இடத்தில் சில மணி நேரம் வலி நீடிக்கிறது. 14 நாட்கள் இடைவெளியில் 2 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் வலுவான நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. மிகக் குறைந்த அளவான 3 மைக்ரோ கிராம் தடுப்பூசி செலுத்திய போதும் எதிர்ப்பாற்றல் தூண்டப்படுகிறது. தடுப்பூசியை காட்டிலும் கொரோனாவால் பாதித்து மீண்டவர்கள் உடலில் அதிக அளவில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir