இலங்கையில், 60 மருந்துப் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, பல சந்தர்ப்பங்களில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 97% வரை உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் வழங்கியிருந்தது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைக்காலமாக கணிசமான அளவில் அதிகரித்து வருவதன் காரணமாக, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தாம் முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
அதன்படி, 60 மருந்துப் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை ஜூன் மதம் 15 ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.