யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ் . மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகள், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி நேற்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன கட்டடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இராணுவத்தினர் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அளவீடு செய்யப்படாமல் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கைகளை உரிய திணைக்களத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply