முடிந்தால் எம்மைக் கைது செய்து காட்டுங்கள் பார்ப்போம் – சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என சரத் வீரசேகரவிற்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்படுகின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சரத் வீரசேகர அண்மையில் கூறியிருந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சரத்வீரசேகர கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார்.

மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏனெனில் மக்களது பிரச்சினை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை. மக்கள் தங்களது பிரச்சினைகளைப் பேசுவதற்காகவே எங்களை நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள்.

தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டுவதற்காகத் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள்.

அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு, இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும்.

சும்மா இராணுவத்தில் இருந்து விட்டு வந்து கொக்கரிக்க கூடாது எனவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply