வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற தருவதாக கூறி 10 கோடி ரூபா பண மோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (19) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரால் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தில் மாத்திரம் இதுவரை 15 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையில் பணம் பெற்றுள்ளதுடன் அவர் கனடா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி ஏமாற்றியுள்ளதாக நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளதுடன், சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயல்முறை பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகக் கூறி தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக 30 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர் பல பிரதேசங்களில் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் மிரிஹான, மடிவெலவில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருப்பதாக மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply