வலி.வடக்கில் காணி சுவீகரிப்பதற்கான வர்த்மானி – சுமந்திரன் விடுத்துள்ள வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது என தழிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் செய்ததைப் போன்று வலிகாமம் வடக்கிலும் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

இந்தக் காணிகளில் சில பகுதிகள் நல்லாட்சி அரசின் காலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தன.

விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்து அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏதுவாக அளவீட்டுப் பணிகள் வலிகாமம் வடக்கில் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்தின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சந்திப்புக்களில் இந்த விடயம் தொடர்பில் பேசியிருக்கின்றோம்.

வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணிகளை சுவீகரித்து வெளியிட்ட வர்த்தமானி தவறு.

அனைத்துக் காணிகளையும் ஒரே வர்த்தமானியில் சுவீகரிக்க முடியாது. ஆகவே அந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பூரில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய வர்த்தமானியை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரே வர்த்தமானியில் மீளப்பெற்றார்.

அதைப்போன்று வலிகாமம் வடக்கிலும் செய்ய வேண்டும் என  வலியுறுத்தியிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுக்கொண்டார். அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு காணி அமைச்சை அறிவுறுத்தியிருந்தார் எனவும் சுட்டிக்காடியுள்ளார்.

அவர்கள் அவ்வாறு செய்யாமல் விடுவிக்கப்பட்ட காணிகளை மாத்திரம் அளவீடு செய்து அவற்றை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் கூட இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றமும் அந்த வர்த்தமானியை மீளப்பெறுவது பற்றி பரிசீலிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

இவை எல்லாவற்றையும் விடுத்து விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்து அதனை மாத்திரம் வர்த்தமானியில் பிரசுரிப்பதை ஏற்க முடியாது.

தவறாக வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply