முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன் போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்ரர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, உதய கம்மன்பில குருந்தூர்மலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.