இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரண்டு சந்தேக நபர்களும் நுவரெலியா, கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ரி-56 ரக துப்பாக்கி ,இரண்டு கைத்துப்பாக்கிகள் அவற்றுக்குரிய தோட்டாக்கள் மற்றும் 167 தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
ரி-56 ரக துப்பாக்கியின் இலக்கம் காவல்துறையால் கைப்பற்றப்படும் போது அழிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 39 வயதுடையவர் எனவும் அவர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய நபர் இரத்தினபுரி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ கப்டன் தர அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரதேசத்தில் சிறைக்காவலர் ஒருவர் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியை காட்டி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள ரி-56 ரக துப்பாக்கி ஹோமாகம நியந்தகல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எனவும் தெரியவந்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக முன்னரே நீதவான் நீதிமன்றங்களால் இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் 72 மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.