தமிழர் தாயகத்தை போதையால் அழிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம்!

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான  க.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டாம் கட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்துடன் கூடிய மதுபான சாலையை வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு கோரி கிராம மட்ட அமைப்புகளுடன் இணைந்து கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திட்டமிடப்பட்ட இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசு, அதன் தொடர்ச்சியாக இவ்வாறான செயல்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.

போதைப்பொருள், சட்டவிரோத மதுபானசாலைகளை அமைத்து கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைப்பு காட்டியுள்ளது.

பிரதேச அமைப்புக்கள், பொது மக்களின் எதிர்புக்களையும் தாண்டி மக்கள் குடியிருப்புக்குள் மதுபானசாலைகளை அமைத்துள்ளனர்.

இதற்கான முறையான அனுமதி பெறப்படாததனை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, உணவுக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்தும் இதனை நடத்தி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெற்றுக்கொள்ளாதமைக்கு எதிராக சட்ட நடவக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

குறித்த சட்டவிரோத மதுபானசாலையை உடனடியாக மக்கள் குடியிருப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்” என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply