புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, பொறுப்புக்கூறல் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்ட விதத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேநேரம் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்ட போதும்  இதுவரை முன்னேற்றகரமான எந்த நடவடிக்கைகளும் அவர் எடுக்கப்படவில்லை என்றும் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்றத்துக்குள் ஒரு பிரேரணையை கொண்டுவர முடிந்த அவரால் ஏன் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அக்கறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply