புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட பகுதியை மீட்டெடுப்பதற்கான ஒரேயொரு உபாயம் இதுவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தமிழரின் முதலீட்டுடன் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும்.

மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக அனைத்துத் தரப்புக்களும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

மாகாணத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றை தருவதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வடக்கு மாகாணத்தில் அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிந்திக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறையை இன்னும் விரிவுபடுத்தி, அதனூடான வருமானமீட்டலையும் வடக்குக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளையும் பெற்று வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

எமது மாகாணத்தைச் சிறந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு.

மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறந்த பெறுபேற்றை தருவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply