
வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதை நிறுத்துவது தொடர்பாகவும், வட பகுதியில் அதிகரித்துள்ள சீன கடலட்டை பண்ணைக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன கடலட்டைப் பண்ணையால் கடற்றொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காது ஐயாயிரம் ஏக்கரில் சீன கடலட்டைப் பண்ணையை அமைப்போம் எனக் குறிப்பிட்டு வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் 21 முழத்திற்கு அதிகமாக கம்பிப்பாடு பாயப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாற அதிகளவில் கம்பிப்பாடு பாயப்பட்டிருப்பதால் தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்களின் படகுகள் மோதுண்டு சேதமடைகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படாது இருக்கின்றன.
ஆகவே அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்து வந்துள்ள சட்டத்தரணி நிமாலினி குணரட்ணத்திடம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பலால் ஏற்பட்ட நட்டத்தை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டைப்பெற்றுக்கொடுக்கும் வகையில், இது தொடர்பான வழக்கை தொடர்ந்தும் தான் முன்னெடுத்துச் செல்வதாக சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.