இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும் நம்பகமான நண்பராக உள்ளது என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த தீவு நாட்டிற்கு இந்தியா வழங்கிய நிதி உதவிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலா பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியின் போது இந்தியா “இலங்கையர்களை காப்பாற்றியது” இல்லையெனில் மற்றொரு இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா இலங்கைக்கு எப்போதும் உதவியது. மேலும், இந்த நேரத்தில் கூட இன்று இந்தியா கடன் மறுசீரமைப்பை 12 ஆண்டுகளுக்கு நீடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபோதும் இதனை எதிர்பார்க்கவில்லை, வரலாற்றில் ஒரு நாடு கூட இதுபோன்ற உதவியை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.