ரணில் விக்ரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளர் அல்ல என்றும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
” பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளர் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானமல்ல.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம்
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதால் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. கட்சி என்ற ரீதியில் முன்னேற்றமடையும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளோம்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைச்சரவைக்குள் இருந்தவர்களே பலவீனப்படுத்தினார்கள்.
அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனூடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் அருகில் இருந்தவர்கள் வகுத்த சூழ்ச்சியை நாங்கள் தோற்கடித்தோம்.
பொதுஜன பெரமுனவில் இருந்து சந்தர்ப்பவாதிகள் வெளியேறியுள்ளார்கள். கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளோம். நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மக்கள் ஆதரவுடன் மீண்டும் வலுப்பெறுவோம் ” எனக் குறிப்பிட்டார்.