இலங்கை அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வந்து, ஊடக சுதந்திரத்தை அடக்கி ஆள முற்படுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டதை விடவும் பயங்கரமான சட்டத்தை கொண்டு வந்து மக்களை அடக்கி ஆள இலங்கை அரசாங்கம் முனைகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தொழிலாளர்களின் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வேளையில், தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்து நிர்க்கதியான சூழலுக்குள் தள்ளுமாக இருந்தால், தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு வீதியில் இறங்கிப் போராடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடம் இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழரின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் நிலையிலும், அடுத்த சுதந்திர தினமும் வெகு விரைவில் வந்து விடும்.
இருப்பினும் அதற்கு முன்னர் என்றாலும் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி அக்கறையுடன் செயற்பட்டு தீர்வைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒருசில தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முற்படும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் நோக்கில் ஒன்று இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்து, தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது போல் நாடகம் ஆடியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு சுடரேற்றியமையை ஒரு குற்றமாக கருதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை மன உழைச்சலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு தமிழின விடுதலைக்காக போராடும் அரசியல்வாதிகளை அச்சுறுத்தி போராட்டக் களத்திலிருந்து விரட்டியப்பதற்கு முனைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.