மீண்டும் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீடு ரணிலின் தேர்தல் வெற்றிக்கான கணிப்பீடா?

இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் கணக்கெடுப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளவுள்ள குடிசன கணக்கெடுப்பு வெறுமனே கணக்கீடா அல்லது ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலான மதிப்பீடா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்காகத் தான் குடிசன மதிப்பீடு என்ற பெயரில் பல கோடி ரூபாக்கள் செலவிடப்படவுள்ளனவா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியில் உள்ள நிலையில், தேர்தல்களை நடத்துவதற்கு பணம் இல்லை எனத் தெரிவித்து வரும் நிலையில் மதிப்பீடு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

குடிசன மதிப்பீடு என்பது பொதுவாக உலக நாடுகளில் இடம்பெறும் ஒரு செயற்பாடு என்றாலும், தற்போதைய சூழலில் இலங்கையில் முன்னெடுப்பதானது அனைவர் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடிசன மதிப்பீட்டின் அடிப்படையிலேயே எதிர்காலத் திட்டமிடல்கள் மற்றும் அபிவிருத்திகள் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் தற்போது வெளிநாட்டுக் கடன்களையும் உள்நாட்டுக் கடன்களையும் கொடுக்க முடியாத நிலையில் உள்ள நாடு, வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்கும் சூழலில் குடிசன மதிப்பீடு மேற்கொள்வது தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில், குடிசன மதிப்பீடு செய்வதற்கான பெருமளவு பணம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவிருந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை, தேர்தலை இப்போது நடத்துவதற்கு அவசியம் இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

எனினும் தற்போது நாடாளுமன்றத்தில் பழைய உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் இயங்க வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply