உள்ளூர் இழுவைப் படகுகளைக் கூட கட்டுப்படுத்த முடியாத கடற்றொழில் அமைச்சர்!

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளன. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த தாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவிற்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத தொழில்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள கடல்வளம் இந்திய இழுவைப்படகுகளாலும் உள்ளூர் இழுவை படகுகளாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைதியின்மை நிலவியது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“நெடுந்தீவு கடலில் நாளாந்தம் 400 முதல் 500 உள்ளூர் மற்றும் இந்திய இழுவைப்படகுகள் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன.

ஆனால் நெடுந்தீவு பிரதேசத்தை சூழ பத்து வரையான கடற்படை முகாம்கள் உள்ளன. இவ்வாறு இருக்கின்ற கடல் படையாலும் கடற்தொழில் அமைச்சராலும் இதனை தடுக்க முடியவில்லை.

இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த தாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்.

நெடுந்தீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அந்த மக்கள் கருத்துக்களை தெரிவிக்க இடமளிக்க வேண்டும்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தாங்கள் இந்தியாவில் போய் பேசுவோம் என மக்களிடம் தவறான கருத்துக்களை கருத்துக்களை கூறி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினோம்.

அப்படி எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. உள்ளூர் படகுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உள்ளது.

1991 ஆம் ஆண்டு அமைச்சர் இங்கு வரும் போது பொலிஸ் இருக்கவில்லை. கடற்படை இருக்கவில்லை என்று அவரே சொன்னார்.

ஆனால், இப்போது கடற்ப்படை இருக்கின்றது பொலிஸ் இருக்கின்றது சகல பாதுகாப்புகளும் இருக்கின்றன.

அமைச்சராக இருக்கின்றார் இவ்வாறு இருக்கின்ற நிலைமையில் தான் இந்த மக்களினுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கான முடிவை யார் எடுப்பது கடற்படையா? அல்லது இளைஞர்களா? என்ற கேள்வியையும் எழுப்பியதுடன், நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளன.

அதைவிட இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் இருக்கின்றார். ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை” எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply