நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த தரப்பினர், தம்மீதான தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீது தான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் எனவும் ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை அரசாங்கம் கொண்டு வந்ததன் விளைவாக, இன்று பலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும், இந்த மருந்துகளை செலுத்திக் கொண்ட ஏனையோர் உயிரிழக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
அப்படியென்றால், இந்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டும் என்றா அவர் நினைக்கிறார்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மருந்தை நோயாளிக்கு உட்செலுத்தியவர் மீதுதான் தவறு என்று, கூறவே இந்தத் தரப்பினர் முனைகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் சுகாதார சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. தங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மக்களின் உயிர் தொடர்பில் எந்த அக்கறையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மக்களை நோயிலிருந்து மீட்பதை விட கொலை செய்வதற்குத் தான் இவர்கள் முற்படுகிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று மக்களுக்கு வைத்தியசாலைக்குச் செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கறையும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பாலத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த பாலத்தை புனரமைக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் கோரி வரும் நிலையில், இதனை புனரமைப்பதற்கு நிதி இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆனால், இவர்களுக்கு உலகம் சுற்ற நிதி இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை என குற்றம் சுமத்தியுள்ளார்.