தமிழரின் சுயநிர்ணயத்தை பாதுகாக்கும் 13ஆம் திருத்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேரடியாகவும் மறைமுகமாகவும் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.

35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தனித்துவம் கொண்ட தேசிய இனமாக தமது தேசத்தில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தினை சர்வதேசமும் வியக்கும் அளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாது. எமக்கான சுயாட்சி இருக்க வேண்டும் எனும் திடமான அரசியல் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்ட வடிவிலே போரியல் ஒழுக்கத்துடன் விடுதலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும், உறவுகள் காணாமலாக்கப்பட்டமை, காணிகள் அபகரிக்கப்பட்டமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கின்றமை என்பவற்றிற்கு நியாயமான நீதியினை பெற்றுத் தருமாறு வடக்கு கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply