ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் 13 பயணிகளுடன் பெலுகா மலையில் சுற்றுலா சென்றிருந்த போதே, திடீரென தீப்பிடித்து தரையில் பதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், Tyungur கிராமத்தில் தரையிறங்கும் நிலையில், ஹெலிகொப்டர் மின் கம்பியில் உரசியதாகவும், இதன் காரணமாகவே வெடித்துச் சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர்.
ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு பேர் என்று கருதப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மேலும் நான்கு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
சடலங்களை அடையாளம் காணும் பணி இன்னும் ஆரம்பிக்காத நிலையில், அந்த ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 8 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சிலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாகவும் அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.