சட்ட விரோதமாக அகழப்படும் மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த சில தினங்களாக பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை. தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 28 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையுடன், சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுப்பதற்கும் சட்டவிரோதமான முறையில் மணலை பதுக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து மீட்பதற்குமான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் முதல் கட்டமாக நேற்று முரசுமோட்டை ஊரியான் கண்டாவளை போன்ற பகுதிகளில் சுமார் 80 லோட் உழவு இயந்திரத்தின் மணல் கைப்பற்றப்பட்டது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கைப்பற்றப்படுகின்ற மணலை நீதிமன்றில் பாரப்படுத்தி, நீதிமன்றின் அனுமதியுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றார்” என்று தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply