காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.
13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி நேற்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, பௌத்த ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.