13 ஆம் திருத்தம் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல – ஆதாரங்களுடன் அனுப்பப்பட்ட கடிதம்!

தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரேவழி எனவும்,13 ஆம் திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல எனவும்  தமிழத்தேசிய மக்கள் முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பான, எழுத்து மூல கடிதத்தை, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்ட அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
13ஆம் திருத்தம் இனப்பிரச்சினைத் தீர்வின் தொடக்கப்புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைத் தெளிவுபடுத்தி 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ்த் தரப்புக்களால் 13ஆம் திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்பதையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பின் மூலம் மட்டுமே 75 வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் எனபதனைத் தெளிவுபடுத்தியும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 13ஆம் திருத்தம் 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதனைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியாகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் சிரேஸ்ட உபதலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் ஒப்பமிட்டு அப்போதய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தயாரித்த தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித்தீர்வு யோசனை வரைபையும் இணைத்து நேற்றைய தினம் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரால் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply