கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம் அருகே மீனவர் நல மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்ன செய்துள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார்.
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 5000 ஆயிரம் ரூபாவிலிருந்து 8000 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரண தொகை மீன்பிடி தர காலத்தில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவை இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.