முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியதே தவிர விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் இராணுவப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் குருந்தூர்மலையில் அனைவரின் ஒத்துழைப்புடனும் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பல தடைகளை எதிர்த்து நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறை மற்றும் பொலிஸாருக்கு நன்றி சொல்ல தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் ஆதிகாலம் முதல் வழிபட்டு வந்த குருந்தூர் மலையிலே அவர்கள் இருப்பினை இல்லாமல் செய்து பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விகாரை கட்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த விகாரை எந்த வித அனுமதியும் இன்றி தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான ஆதரவுடனும் அரச ஆதரவுடனும் கட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிசிவன் அழிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் தற்போது பொங்கல் பொங்குவதற்கு ஒரு இடத்தினை குறிப்பிட்டு அந்த இடத்தில் கல் வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதன்மேல் அடுப்புவைத்துதான் பொங்கவேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த ஆலயத்தில் பார்க்கமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார் .
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியதே தவிர அது விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கு ஒரு சட்டமாக காணப்படுகின்றது என விசனம் வெளியிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.