வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு வருட காலப் பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது இதனால் பொது மக்கள் பாரிய அசௌகரியத்தினை எதிர்நோக்கி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மருந்து தட்டுபாடு தொடர்பான பிரச்சினை ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் ஒரு சில மருந்துகள் மற்றும் விசேட வைத்தியத்திற்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.