சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினை – தினேஷ் குணவர்தன விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

சமுர்த்தி திணைக்களத்திற்கு உள்வாங்கப்படும் போது 44உ(11) பிரிவின் கீழ் தமது விருப்பத்தை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 60 வீத ஊழியர் சேமலாப பங்களிப்பு நிதியை செலுத்துவதில் 4 வீத மேலதிக வட்டியை அறவிட தீர்மானித்துள்ளமை நியாயமற்றதாகும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் பதவிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கான அங்கீகாரம் , சமுர்த்தி உத்தியோகத்தர்களை எம். என் 02 சம்பள அளவுத்திட்டத்தில் நிறுவுதல், பதவி உயர்வு முறைமையை அமைத்தல், சமுர்த்தி அபிவிருத்தி சேவைக் காலத்துடன் சமுர்த்தி ஊழியர் சேவைக் காலத்தை சேர்த்தல், விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிக்கான நிலுவைத் தொகையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டு வட்டியுடனான 4 வீத மிகை கட்டணம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தடையாக உள்ள கட்டளைச் சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான விடயங்களை அதிகாரிகள் விளக்கியதுடன், நாடு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில் இந்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதிருப்பது, செயலாற்றுகை பின்னடைவதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply