அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினரான கிரிஸ் வேன் ஹோலென் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஒக்டோபர் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சில குடும்ப உறுப்பினர்களை கிரிஸ் வேன் ஹோலென் சந்தித்துள்ளார்.
இதன்போது, நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் அமெரிக்கா என்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உறவுகளை எண்ணி கவலையுடனே பயணிக்கின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியன கிடைக்கப்பெற வேண்டும் என கிரிஸ் வேன் ஹோலென் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,
கிரிஸ் வேன் ஹோலென் இலங்கையின் நீண்டகால நண்பர். இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த உழைத்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தானும், கிரிஸ் வேன் ஹோலெனும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவதற்கான வழிகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதோடு, ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு தொடர்பிலும் ஆராயவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிரிஸ் வேன் ஹோலெனி தந்தை 1972 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்துள்ளமை,இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கான 75 வருடகால கூட்டாண்மையை மேலும் வலுவாக்குகின்றது எனத் தெரிவித்துள்ளார்.