இந்திய பெருங்கடலில் செல்வாக்கு செலுத்த முயலும் வல்லரசுகள் – ரணில் விடுத்துள்ள அறிவிப்பு!

வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையிலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய பெருங்கடலில் தமது செல்வாக்கினை நிலைநிறுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இலங்கைக்கு இராணுவ அபிலாஷைகள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த இராணுவ செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கும் இலங்கை விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் எந்தவொரு இராணுவ ஒத்திகைக்கும் இலங்கை ஆதரவளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகள் மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள பல நாடுகள், நல்வாழ்வு மற்றும் அபிவிருத்தி இலக்குகளை சமரசம் செய்யும் சக்திகளுக்கு இடையிலான போர்களில் உள்ளீர்க்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரியளவிலான பிராந்திய செல்வாக்கிற்காக சங்கத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply