சர்வதேச விசாரணை இல்லை – வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ரணில்!

இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

ஜேர்மனியை தளமாகக் கொண்ட DW செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்படுகின்ற கோரிக்கை குறித்து, DW செய்தி சேவை ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் கடுமையாக சாடியுள்ளார்.

அதேவேளை, “இலங்கை அரசாங்கம் சர்வதேச  விசாரணைகளை நடத்தாது. முற்றுப்புள்ளி” என ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியாவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பில் வெளி தரப்பின் தலையீடு இல்லை என FBI அறிக்கை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளரின் கேள்வியால் கடும் கோபமடைந்த ரணில் விக்ரமசிங்க, “முட்டாள்தனமாக பேசுகிறீர்கள், இந்த கேள்வியை என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை, எனவும் தாங்கள் இரண்டாம் தரம் என நினைக்கிறீர்கள் என்பதோடு, இந்த மேற்கத்திய மனோபாவத்தை நீங்கள் அகற்ற வேண்டும், நீங்கள் நிறுத்துங்கள், நான் நிறுத்துகிறேன்” என கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply